May 29, 2020
தண்டோரா குழு
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை தவிர்க்க வேண்டும் என கோவை மாநகராட்சி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், மருத்துவக்கழிவுகளை சிறப்பாக கையாள மேற் கொள்ளப்படும் வகையில்,ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை தவிர்த்து, துவைத்து மீண்டும் பயன் படுத்தக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை கோவை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்,மருத்துவமனைகள், சுகாதார மையங்கள்,தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆகியவற்றிலிருந்து மருத்துவக்கழிவுகள் தனியாக பெறப்பட்டு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில்,அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் முகக்கவசங்கள்,கையுறைகள், சானிடரி நாப்கீன்கள்,பேபி டைபர்கள் மற்றும் பல மருத்துவக்கழிவுகளை தனியாக ஒரு பையில் சேமித்து தெருவில் வரக்கூடிய தூய்மை பணியாளர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.