May 20, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஊரடங்கினால் முடக்கப்பட்ட பழங்குடி மக்களின் பசியாற்ற சமுதாய சமையலறை ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது.
கெத்தைக்காடு,தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் ஒரு இருளர் பழங்குடியின கிராமம். இக்கிராமம் கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் அடர் வனத்திற்குள் அமைந்துள்ளது.இப்பகுதிக்கு கொரோனா அச்சத்தோடு,ஊரடங்கும் சேர்ந்து வந்தது. பேருந்துகள் நிறுத்தப்பட்டதாலும், மக்கள் வெளியே வர கெடுபிடிகள் செய்யப்பட்டதாலும் கிட்டத்தட்ட வெளி உலக தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலை உருவானது.
மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர். காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாத நிலையும், வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானம் இழந்து தவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இது தான் சுற்றுவட்டாரத்தில் உள்ள மற்ற பழங்குடி கிராங்களின் நிலையாகவும் இருந்தது. அப்போது பழங்குடி மக்களின் நிலை அறிந்து தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டினர்.
முதலில் அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்களை உள்ளிட்டவற்றை அம்மக்களுக்கு கொண்டு சேர்த்தனர்.இதைதொடர்ந்து பழங்குடிகளின் பசியை போக்கும் வகையில் சமுதாய சமையலறை என்ற திட்டத்தை செயல்படுத்தினர்.பூச்சமரத்தூர்,குரவன்காடு, சுரண்டி,கெத்தைக்காடு,வீரக்கல்,கோரைபதி, மானார் ஆகிய 7 பழங்குடி கிராமங்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக,இந்த சமுதாய சமையலறை இயங்கி வருகிறது.
எழுத்தாளர் ஒடியன் லட்சுமணன்,ஷாஜகான் உள்ளிட்டோரின் முன்னேடுப்பில்,ஏராளமான தன்னார்வலர்களின் பொருள் மற்றும் நிதியுதவினால் தொடர்ந்து சமுதாய சமலயலறை இயங்கி வருகிறது. கிராமத்தில் உள்ள சிலர் இணைந்து சமையல் செய்து, பின்னர் ஊரில் உள்ள அனைவரும் இணைந்து சாப்பிடுகின்றனர்.ஊரடங்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்த போது பகலிலும் சமைத்து பரிமாறப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இரவு நேரம் அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு மட்டும் பகலிலும் உணவு சமைத்து தரப்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை என உணவு செய்து தருவதாகவும் பழங்குடிகள் தெரிவித்தனர்.