May 15, 2020
தண்டோரா குழு
பொள்ளாச்சி அருகே மதுபோதைக்காக ஸ்பிரிட் கலந்த ஆயிலை குடித்த இருவர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபானகடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மாற்று போதைக்காக வேறு சில ரசாயனங்களை குடித்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே குரும்பபாளையத்தில் பைப் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தவர்கள் சுரேஷ் (27) மற்றும் உத்தராஜ் (30).இவர்கள் இருவரும் மதுபோதைக்காக தாங்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் குழாய்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆயிலை, ஸ்பிரிட் கலந்து குடித்துள்ளனர்.உடனடியாக இருவரும் சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.