April 25, 2020
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்காக தனியாக மருத்துவமனை அமைக்கப்பட்டது. இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து தொற்று நோய் சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர் முரளி, நுரையீரல் சிறப்பு மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில்,
பி. எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக தனியாக மருத்துவமனை ஒதுக்கப்பட்டது. இதில் மார்ச் இறுதி மாதத்தில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 13 பேருக்கு கொரோனா
நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் ஐந்து நபர்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
இதில் சர்க்கரை நோயாளியாக உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு நோயாளி மூச்சுத்திணறல் காரணமாக நினைவு இழந்தார். அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. இந்த நோயாளி மிகுந்த கவனத்துடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவர் பூரண குணம் அடைந்தார்.பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சிகிச்சை பெறும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால் மரணம் ஏற்படும் என்று பயப்பட வேண்டியதில்லை.மருத்துவர்களின் சரியான சிகிச்சை மூலம் கொரோனா நோய் தொற்றில்
இருந்து குணமடையலாம்.நோயின் தன்மையைப் பொறுத்து 14 நாட்கள் முதல் 28 நாட்கள் வரை சிகிச்சை பெற்று நோய்களில் குணமடைகின்றன. இவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் தரப்படுகிறது. மேலும், மருத்துவமனை நிர்வாகத்தின் ஒத்துழைப்பு காரணமாக மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் செவிலியர் பங்கும் மிக முக்கியமானதாக உள்ளது என்றார்.
பேட்டியின் போது பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஐ.சி.யு மருத்துவ குழுவினர் வினோத், அருண், சந்தோஷ், சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.