April 24, 2020
தண்டோரா குழு
கோவை மாநகரில் ஒரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 537 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.அன்னூர் காவல் நிலைய பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 போலீசாருக்கும், ஒரு ஆயுதப் படைக் காவலருக்கும், குனியமுத்தூர் காவல் நிலைய காவலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை சார்பில், சீல் வைக்கப்பட்ட பகுதியில் அவர்கள் பணியாற்றியதால் அதன்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்ட 7 நபர்களில் 4 நபர்கள் கோவை போத்தனூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போத்தனூர் காவல்நிலையத்தை மூடவும், தற்காலிகமாக ஒரு சில நாட்களுக்கு மண்டபத்தில் இயங்கவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கு பணியாற்றியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே பாதுகாப்பு கருதி, கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உணவகம் மூடப்பட்டுள்ளது.