April 23, 2020
தண்டோரா குழு
கோவையில் இறைச்சி கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
கோவை மாவட்டத்தில் இன்று முதல் கறிக்கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததற்கு, தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு கோழி இறைச்சி விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடைக்கு வருபவர்கள் சமூக இடைவெளிவிட்டு இறைச்சிகளை வாங்கி செல்லாமல் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் செல்வதாக புகார் வந்தது. இதனையடுத்து கொரோானா வைரஸ் பரவாமல் தடுக்க கறிக் கடைகள் அனைத்தையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 13″ம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து கோழி இறைச்சி மற்றும் கறிக்கடைகள் முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் இறைச்சி கிடைக்காமல் அசைவ பிரியர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் கோவை மாவட்ட இறைச்சிக் கடைகள் உரிமையாளர் சங்கத்தினர் கோவை மாவட்டத்தில் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர் திரு.எஸ்.பி வேலுமணி சந்தித்து கோரிக்கை வைத்தனர்.இ்தனை அடுத்து இன்று முதல் கோவை மாவட்டத்தில் கறிக்கடைகள் செயல்பட மாவட்ட ஆட்சியர் ராசாமணி அனுமதி அளித்தார். மேலும் அவர் கறிக்கடைக்கு வரும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி கறிகளை வாங்கிச் செல்ல வேண்டும், அவ்வாறு சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில் கோழி இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளி விட்டு வாங்கி செல்லுமாறு இறைச்சி விற்பனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அதைப்போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் ராணி பிராய்லர் நிறுவனத்தின் உரிமையாளர் சுரேஷ் குமார் பேசுகையில்,
எங்களது கோரிக்கையை ஏற்று கடைகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறிய அவர்,அரசின் உத்தரவப்படி, இனி வரும் காலங்களில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் தயவு கூர்ந்து சமூக விலகலை கடைபிடித்து இறைச்சிகளை வாங்கி செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.