April 16, 2020
தண்டோரா குழு
கோவை செம்மேடு அருகே வாயில் காயத்துடன் நின்றிருந்த 6 வயதுடைய காட்டு யானை மயங்கி விழுந்து உயிரிழந்தது.
கோவை ஆலந்துறை அடுத்த செம்மேடு அருகே மாம்படிகை நொய்யல் ஆற்றில் ஒற்றை காட்டு யானை நிற்பதாக அப்பகுதி மக்கள் போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து சுமார் 15 பேர் கொண்ட வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மேல் தாடையில் பலத்த காயத்துடன் காட்டு யானை நொய்யல் ஆற்றில் நின்று கொண்டிந்தது.இதையடுத்து யானைக்கு தேவையான வாழை,தென்னை உள்ளிட்ட உணவுகளை ஆற்றின் கரை ஒரத்தில் வனத்துறையினர் வைத்தனர்.ஆனால் வாயில் அடிப்பட்டிருந்ததால் தொடர்ந்து ஆற்று நீரை கடவாய் பகுதியில் தெளித்தவாறு யானை ஆற்றின் நடுவே நின்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு பின் யானை நொய்யல் ஆற்றங்கரையில் மயக்க நிலையில் படுத்ததாக தெரிகிறது. இதனிடையே மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஓய்வு பெற்ற வன மருத்துவர் மனோகரன் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனை செய்த போது படுகாயத்துடன் இருந்த யானை உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த யானை உடலில் தந்தத்தால் குத்தப்பட்ட காயங்கள் உள்ளது. மேலும் கடவாய் உடைந்தும், நாக்கு கிளிந்துள்ளதால் யானை உணவு சாப்பிட முடியாமல் உயிரிழந்ததாகவும், வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் மோதிக்கொண்டதில் ஆண் யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் நாளை உயிரிழந்த யானைக்கு பிரேத பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.