April 15, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிந்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். தமிழகத்தில் 1.5 லட்சம் கொரோனா நோயாளிகளுக்குக் கூட சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், வசதிகள் தயாராக உள்ளன. அந்தளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை, எனினும் தயாராக இருக்கிறோம்.தமிழகத்தில் 26 பரிசோதனை மையங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 5,320 பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் விகிதம் 9.5%. இறப்பு விகிதம் 1.1% ஆகும் என்றார்.