April 15, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டையுடன் சேர்த்து உணவு இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவை மாவட்டத்தில் 2140 பேருக்கு பரிசோதனை செய்ததில் 126 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நோய்தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணியும்,வீடுவீடாக சென்று பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.கோவையில் 12 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, நாளை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களில் முட்டை வழங்கப்படும்.தினமும் 15 அம்மா உணவகங்களில் 18000 பேர் சாப்பிடுகின்றனர். அம்மா உணவகங்களில் சாப்பிடுபவர்களுக்கான செலவை கோவை மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. முழுமையாக கொரோனா நோய் கட்டுப்பட பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 15 நாட்கள் கட்டுப்பாடாக இருந்து விட்டால் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும்,கோவையில் அரசு மருத்துவமனை முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கின்றோம் என தெரிவித்தார்.முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான பெரிய ஓட்டல்களில் ரூம் தருவதற்கு அறிவுறுத்தி இருக்கின்றோம். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட இருப்பதாகவும் முதுகலை மருத்துவ மாணவர்களை கவனமாக இருக்க சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். கோவையில் என்.95 முக கவசம் தேவையான அளவு இருக்கின்றது எனவும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தரமான உணவு கொடுக்க சொல்லியும் அறிவுறுத்தி இருக்கின்றோம் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.