April 15, 2020
தண்டோரா குழு
பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி பழங்குடியின மக்களுக்கு உதவிய தொண்டு அமைப்பினர்.
கோவை மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி கிராமம் கிராமமாக சென்ற தொண்டு அமைப்பினர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கோவை மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் குழந்தைகள் பொது நல அறக்கட்டளை அமைப்பினர், மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் தலைமையில் கொள்ளு, கோதுமை, எண்ணெய், உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி சென்ற அவ்வமைப்பினர் கிராமம் கிராமமாக சென்று பொருட்களை வழங்கினர்.
அத்திக்கடவு, பில்லூர், சுரண்டி, தோண்டை, நீராடி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களில் உள்ள 554 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. தினக் கூலிகளாக பணியாற்றி வரும் அப்பகுதி மக்கள் வருமானம் இழந்துள்ளதோடு, நகரப்பகுதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வர முடியாத நிலை உள்ள நிலையில், இந்த உதவி அம்மக்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.