April 15, 2020
தண்டோரா குழு
கோவையில் பெண் ஆய்வாளரை தகாத வார்த்தையில் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் அம்மன் கோவில் சந்திப்பு அருகே கொரோனா தொற்று இருப்பதால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குனியமுத்தூர் எஸ்.என்.ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது சபிக் என்ற 34 வயது இளைஞர் தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்றார்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் சௌபர்ணிகா, இங்கு யாரும் செல்லக்கூடாது என முகமது சபிக்கை தடுத்துள்ளார்.அப்போது அவரை தகாத வார்த்தைகள் பேசி முகமது சபீக் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சௌபர்ணிகா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .
இதனையடுத்து தடையை மீறி தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிக்குள் செல்ல முயன்ற முகமது சபிக்கை கைது செய்தனர். அவர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம், தகாத வார்த்தைகளால் பேசுதல்,அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவிநாசி சிறையில் அடைத்தனர்.