April 13, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்திரவை நீட்டித்து உத்திரவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்,
ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை தளர்த்தினால் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, 144 தடை உத்தரவின் படி, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து மற்றும் மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2ம் முறையாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும். ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், அரிசி விலையின்றி வழங்கப்படும். பிற மாநில தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையின்றி வழங்கப்படும்.காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க தடையில்லை. பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.