April 11, 2020
தண்டோரா குழு
கோவையில் நாளை முதல் இறைச்சி கடைகள் இயங்காது என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணி இன்று ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ,
கோவை மாவட்டத்தில் இன்றைய தேதியில் 86 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள 206 பேர் கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 90 பேருக்கு சோதனை செய்ததில் 26 பேருக்கு பாசிடிவ் என நேற்று முடிவு வந்துள்ளது. மீதமுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இன்னமும் ரிசல்ட் வர வேண்டி இருக்கின்றது.
எங்கெல்லாம் கொரோனா பாசிடிவ் என கண்டறியப்பட்டு இருக்கின்றதோ அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்பு செய்யப்படுகின்றது. மருத்துவ,வருவாய் பணியாளர்கள் 700 பேர் களத்தில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாவட்டத்தில் மதுக்கரை, அன்னூர்,மேட்டுப்பாளையம், கோவை ஆகிய இடங்களில் 97 ஆயிரம் வீடுகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் அத்தியாவசிய தேவை தவிர வேறு காரணத்திற்காக பொதுமக்கள் வெளியில் வர கூடாது. அவசியம் இல்லாமல் வெளியில் வருபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும். அறிவுரைகளை மீறுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் கைது நடவடிக்கையும் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்,கோவை மாவட்டத்தில் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி கடைகள் நாளை முதல் இயங்க கூடாது. இறைச்சி கடைகள் மீண்டும் எப்போது செயல்படலாம் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சென்னை மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கேரளாவை சேர்ந்த நபர் கொரோனா காரணமாக இறந்து இருக்கின்றார். எனவே அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர், செவிலியர்கள் 20 பேர் தனிமைபடுத்தபட்டு இருக்கின்றனர். அவர்களின் சளிமாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பபபட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
கொரோனாவால் இறந்த கேரள நபர் மற்றொரு கோவை காந்திபுரம் பகுதியில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த மருத்துவமனை குறித்தும் ஆய்வு செய்து வருகின்றோம் எனவும் ஆட்சியர் ராசமணி தெரிவித்தார்.கோவையில் உள்ள சென்னை மருத்துவ மனையில் இறந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே அங்குள்ள மருத்துவர், மருத்துவங்கி பணியாளர்கள் தனிமை படுத்தபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தியதில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரியவந்திருப்பதாகவும்,ஆனால் அங்கு தங்கி இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.