April 11, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரானா அறிகுறியுடன் தனிமைப் படுத்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்ற தமுமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தோடு, பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனோ அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, சுகாதாரத்துறை அவர்களை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், கோவை குனியமுத்தூர் வசந்தம் நகர் பகுதியில் கொரோனோ அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டிற்கு கிணத்துக்கடவு தொகுதி தமுமுக நிர்வாகி பெரோஸ்கான் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்திய குனியமுத்தூர் போலீசார் குரோனோ அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட அவரின் வீட்டிற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தியும் பெரோஸ்கான் சென்றதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து பெரோஸ் கான் மீது 144 தடையுத்தரவை மீறுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நீதிபதி முன் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.