April 10, 2020
தண்டோரா குழு
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஆவேசமடைந்தார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனோ தொற்றின் வேகம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையில் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் படுபவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போத்தனூரை சேர்ந்த 27 வயதுடைய நபருக்கு இ .எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவருக்கு அவருடைய வீட்டில் பிரியாணி சமைத்து கொடுத்துள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் சாப்பிட அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து,மருத்துவமனை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.