April 10, 2020
தண்டோரா குழு
கோவையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்கடம் பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் பெண் ஆய்வாளர் பிரபாதேவியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
கொரொனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கடந்த 4ஆம் தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் கொரொனா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் எனவே அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் சில தினங்கள் முதல் ஊரடங்கு போது முகக் கவசம் அணியாமல் வெளியே வந்து சிக்கும் வாகன ஓட்டிகள் மீது கோவை மாநகர போலீசார் முகக் கவசம் இல்லை என்ற ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் கோவை உக்கடம் பகுதியில் மூன்றாவது நாளாக ஆர்.எஸ் புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாதேவி முகக் கவசம் அணியாமல் இருசக்கரத்தில் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் கொடுத்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் அறிவுறுத்தியும் வருகிறார்.அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் இவர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.