January 31, 2019
தண்டோரா குழு
கோவை வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி யானை மீண்டும் கிராமப்பகுதியில் நுழைந்தது.
தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 25ம் தேதி விநாயகன் யானையை பிடித்த அதே இடத்தில் சின்னத்தம்பி யானையை மூன்று முறை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர்,
கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்பட்டது. இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு விடப்பட்டது.சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்டிருந்தது
இந்நிலையில், காட்டு யானை சின்னத்தம்பி, இன்று காலை பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், அங்கலக்குறிச்சி, ஆழியாறு உள்பட 5 கிராமங்களில் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மீண்டும் சின்னதம்பியை வனப்பகுதிக்கு முயன்றனர்.
ஊருக்குள் வந்த காட்டு யானை சின்னத்தம்பி வனத்துறையினர் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர். மேலும் யானையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.