January 30, 2019
தண்டோரா குழு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மகளை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த இளைஞரை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் தாக்கியதில் பெண்ணின் தந்தை உயிரிழந்தார்.
அறந்தாங்கி பேராவூரணி சாலையில் உள்ள ரத்தினக்கோட்டை நரியங்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். விவசாய கூலி வேலை செய்யும் இவருடைய 2வது மகள் சரண்யாவிற்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ள தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.கடைவீதிக்கு சென்றபோது அங்கு நின்றிருந்த இளைஞரை பெண்ணின் தந்தை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட, அப்போது நெஞ்சில் பலமாக கையால் தாக்கப்பட்டதால் மயங்கி விழுந்த மகாலிங்கம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு திரண்ட மகாலிங்கத்தின் உறவினர்கள், அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் தற்போது தலைமறைவாக உள்ள செல்வத்தை தேடி வருகின்றனர்.