• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு விவகாரம் – ஆளுநர் மாளிகை முன் திமுக போராட்டம் அறிவிப்பு

January 22, 2019 தண்டோரா குழு

கொடநாடு விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாவட்ட திமுக செயலாளர்கள் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

“கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டனர். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள். ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார். இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ்குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதல்வர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார்.

இப்பிரச்சினை குறித்து நான், கடந்த 14-1-2019 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து, பத்திரிகையாளர் மாத்யூ வெளியிட்ட கொடநாடு நிகழ்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் – நேர்மையான விசாரணை நடைபெற முதல்வர் பதவியிலிருந்து விலகிட அறிவுறுத்தவும் – நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், இன்று வரை அக்கோரிக்கை மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும்; தமிழக ஆளுநர், முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வருகின்ற வியாழக்கிழமை (24-ம் தேதி) அன்று காலை 10.00 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்எல்ஏ – சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ – சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏ – சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க