January 21, 2019 தண்டோரா குழு
அண்ணா பல்கலைகழகத்தில் கிரெடிட் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த புதிய முறையை ரத்து செய்ய முடியாது என பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு முதல் கிரெடிட் முறையில் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, பொறியியல் மாணவர்கள் ஒரு செமஸ்டரில் உள்ள பாடத்தில் தோல்வியடைந்தால் அடுத்த செமஸ்டரில் தேர்வு எழுதலாம். ஆனால், தற்போதைய கிரெடிட் முறையில் அடுத்த ஆண்டு தான் தேர்வு எழுதும் வசதி உள்ளது. எனவே, அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய புதிய தேர்வு விதிமுறைகளை திரும்பப் பெறக்கோரி மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு முற்றுகைப்போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறியே போலீசார் மாணவர்களின் போராட்டத்தை கலைத்தனர். தங்களுக்கு சாதகமாக பல்கலைக்கழகம் முடிவு எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று, பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இதுகுறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்,
கிரெடிட் தேர்வு முறையை ரத்து செய்ய முடியாது. மாணவர்களின் நலன் கருதியே பல்கலைக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆசிரியர்கள் இதுகுறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மாணவர்கள் போராட்டம் நடத்த கூடும் என தோன்றுகிறது.