January 9, 2019
தண்டோரா குழு
நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படாததை எதிர்த்து நிதிமன்றம் மீது அவமதிப்பு வழக்கு போடப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர் ஹர்மந்தர் சிங், ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜராகினர். புதிய பேருந்து நிலையம் அமைக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடமே ஆகச்சிறந்த இடம் எனப் பதில்மனுவில் குறிப்பிட்டுவிட்டு இப்போது மாற்றிப் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அரசியல்வாதிகளோடு சேர்ந்து கைகோக்காமல் அரசு அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் பணிபுரிய வேண்டும் என அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதுமட்டுமின்றி நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், வரும் 11 ஆம் தேதி விசாரணையை தள்ளிவைத்தனர்.