January 3, 2019
தண்டோரா குழு
பணமதிப்பிலப்பு நீக்கத்துக்குப் பின் புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தற்போது 2000 நோட்டுகளை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது நீக்கம் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அப்போது நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மொத்த மதிப்பு ரூ.7.8 லட்சம் கோடியாக குறைந்து இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத சில்லறைத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதன் பின்பு 2018 ஆண்டில் புதிய 10, 50, 100, 200 ரூபாய் நோட்டுகளும் நாட்டில் புழகத்தில் வந்தது.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கம் இரண்டும் இந்திய பொருளாதாரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறினார். ஆனால் இந்த பணமதிப்பு நீக்கம் நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என மத்திய அரசு இன்னமும் கூறிக்கொண்டு இருகிறது. ஆனால் 99.3% பணம் வங்கிகளில் செலுத்தி மாற்றப்பட்டுவிட்டதாகவும் வெறும் 0.7% கருப்புப்பணம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எவ்வளவு அச்சிடப்பட்டது என்ற தகவலைத் தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை மத்திய அரசு நிறுத்தப்பட்டுவிட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிக மதிப்பு கொண்ட நோட்டுகளை பதுக்கி, கறுப்பு பணம் சேர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதிகளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கம் என்பது, ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் நோக்கத்தினை சிதைத்து விடும் என மத்திய அரசு கருதுகிறது. கடந்த மார்ச் 2018 ன் புள்ளிவிவரப்படி, மொத்தம் ரூ.18.03 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் உள்ளது. இதில், ரூ.6.73 லட்சம் கோடி (37 சதவீதம்) ரூ. 2 ஆயிரம் நோட்டுகளிலும், ரூ.7.73 லட்சம் கோடி(43 சதவீதம்) ரூ.500 நோட்டுகளிலும் புழக்கத்தில் உள்ளன. எஞ்சிய பணம் மற்ற நோட்டுகளில் புழக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.