December 25, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் நல்லது செய்தால் கூட யாரும் நன்றி கூட சொல்ல தயாராக இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
இன்று நல்லாட்சி தினமாக வாஜ்பாய் பிறந்த தினத்தை பா.ஜ.க கொண்டாடி வருகின்றது. காங்கிரஸ் – திமுக ஆட்சி எப்படி தோல்வியான ஆட்சி என்பதை மக்களிடம் சிந்திக்க சொல்வோம். மக்களுக்கு நல்லது செய்வதில் தோல்வியடைந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சொல்லி ஏமாற்று வேலையை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது. பா.ஜ.க நல்ல கூட்டணி அமைப்போம்.
ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதால் திரைப்பட டிக்கெட் உட்பட பல்வேறு பொருட்களின் விலை குறைவுந்துள்ளது. திரைப்பட டிக்கெட் குறைக்கப்பட்டதற்கு வடமாநில திரையுலகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் நல்லது செய்தால் கூட யாரும் நன்றி கூட சொல்ல தயாராக இல்லை. உயர் மின் கோபுரங்களுக்கு எதிராக இருக்கும் விவசாயிகள் கோரிக்கை குறித்து மத்திய அரசுக்கு எழுதி இருக்கின்றோம். மக்கள் கோரிக்கைகள் பரீசிலிக்கப்படும் எனவும் தமிழிசை தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் திட்டங்கள் விவசாயத்தை மேம்படுத்தும் விதமாகவே இருக்கின்றது. விவசாயத்திற்கு எதிராகவே மத்திய அரசின் திட்டங்கள் இருப்பதாக கூறுவது தவறானது. மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்குவது காங்கிரஸ் பழக்கம். மீத்தேன் ,ஹைட்ரோ கார்பன் திட்டதிற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் அவை நிறுத்தப்பட்டது. உயர்மின் கோபுரங்கள் திட்டத்திற்கு விவசாயிகள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அது இருக்காது. மேகதாது விவகாரத்தில், ஸ்டாலினும் திருநாவுக்கரசரும் கர்நாடகாவிற்கு சென்று அணை கட்டக்கூடாது என ஏன் இதுவரை கூறவில்லை. மக்களிடம் நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்து செல்கிறோம். மேகதாது அணை விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் ஸ்டாலின் பேசினாரா என்பதையும் அதில் அவர்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.