August 31, 2018
தண்டோரா குழு
தேனிலவு கொண்டாடுவதற்காக உதகைக்கு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்தனர்.
நீராவி மூலம் இயங்கும்,நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலை ரயில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தினசரி ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் மலை ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.இந்நிலையில்,இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பொறியாளர் கிரகாம் வில்லியம் லியன் [30],போலந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சில்வியா பிலாசிக் [27],இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துள்ளனர்.இவர்கள் திருமணத்திற்கு பிறகு வெளிநாடு சுற்றுலா செல்ல முடிவு செய்து இந்தியாவை தேர்ந்தெடுத்தனர்.
யுனெஸ்கோ உலக பாரம்பரிய வரைப்படத்தில் இடம்பெற்ற ஊட்டி மலை ரயிலில் பயணிக்க விரும்பி ரயில்வே டூரிஸ்ட் [ஐ.ஆர்.சி.டி.சி.] மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இதையடுத்து,உதகை செல்வதற்காக தங்களுக்கென்று தனியே மலை ரயிலை இயக்க கோரி ரயில்வே நிர்வாகத்திடம் முன்பதிவு செய்தனர்.இதற்காக 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்திய அவர்களுக்கு மூன்று பெட்டிகளோடு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.பின்னர் நீராவி மூலம் இயங்கும் மலை ரயிலின் சிறப்புகளை கேட்டறிந்தனர்.அவர்களுக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரி வேதமாணிக்கம் விளக்கி கூறினார்.
இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறுகையில்,
முதல் முறையாக இந்தியா வந்துள்ளோம்.இந்தியாவில் அதுவும் யுனெசுகோ பாரம்பரியம் மிக்க ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.மிகவும் அழகான அமைதியான நாடாக இந்தியா திகழ்கிறது என்றனர்.இதைத்தொடர்ந்து நீராவி மூலம் இயங்கும் மலைரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்த கிரகாம் தம்பதி,அதில் மிகுந்த உற்சாகத்தோடு பயணம் மேற்கொண்டனர்.