August 31, 2018
தண்டோரா குழு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லிண்டோ ஆண்டனி என்ற வாலிபர் வெளிநாட்டில் வேலை தேடி வந்த நிலையில் கேரளாவை சேர்ந்த வினோத் வில்சன் என்பவர் மூலம் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் கோவையை சேர்ந்த மல்லிகாமணி என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.அப்போது சேலம் முருகன் ட்ரஸ்ட் என்ற நிறுவனம் மூலம் லண்டனில் வேலை இருப்பதாகவும் அதற்கு மூன்று லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் முன்பணமாக 50ஆயிரம் ரூபாயை அந்நிறுவன வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
எனினும் லண்டனில் வேலை வாங்கி தராமல் சிங்கப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வேலை இருப்பதாகவும் அதற்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனக் கூறி ஏற்கனவெ செலுத்திய 50 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்ட அந்நிறுவனத்தினர் கோவை விண்டெர்ஸ் இண்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சான்றிதழ்களுடன் வருமாறு கூறி அங்கு பிரபாகரன்,வித்யாஸ்ரீ,சாரா ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் மல்லிகாமணி சிங்கப்பூரில் வேலை உறுதியாகி விட்டது எனவும்,ஆன்லைன் மூலம் விசா கிடைக்கப்பெறும் எனவும் கூறி மேலும் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு போலியான பணி உத்தரவு கடிதத்தையும் வழங்கினர்.தொடர்ந்து அயர்லாந்து நாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி அவர்கள் ஏமாற்றி வந்ததையடுத்து பாதிக்கப்பட்ட லிண்டோ ஆண்டனி இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
அப்போது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தன்னை சிங்கப்பூர்,லண்டன்,அயர்லாந்து என பல நாடுகளின் பெயர்களை கூறி ஏமாற்றிய அந்த நான்கு நபர்களும் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களிடமும் இதேபோன்று சுமார் 70 லட்சம் ரூபாய் வரை வசூலித்து மொசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.