August 22, 2018
தண்டோரா குழு
டெல்லி பாஜக அலுவலகத்தில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநில தலைவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வழங்கினர்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயி கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.இதையடுத்து,ஆகஸ்ட் 17ம் தேதி மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வாஜ்பாயின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது.இதையடுத்து,அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்,உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கையாற்றில் வாஜ்பாயின் அஸ்தியை கடந்த 19ம் தேதி கரைத்தனர். இதையடுத்து நாடு முழுவதும் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில்,வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை மாநில தலைவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது.இதில்,இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்கினர்.
அப்போது,29 மாநிலத் தலைவர்களும்,9 யூனியன் பிரதேச தலைவர்களும் அஸ்தியை பெற்றுக்கொண்டனர்.அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பகுதியில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுகிறது.தமிழகத்தில் வாஜ்பாயின் அஸ்தியை வரும் 26ம் தேதி பௌர்ணமி அன்று கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.