July 28, 2018
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில்,நேற்றிரவு கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால் காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் இரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்ட காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.தொடர்ந்து மருத்துவர்கள் கருணாநிதியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலைக் குறித்தும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் டிவிட்டரில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்,டெல்லி முதல்வரும்,ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்,திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.