• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செல்பி எடுத்த போது ராட்சத அலையில் சிக்கி கணவன் மனைவி பலி

July 19, 2016 தண்டோரா குழு

நாகர்கோவில் அருகே கடற்கரையில் செல்போனில் ‘செல்பி’ எடுத்த கணவன் மனைவி ஆகியோரை ராட்சத அலை இழுத்துச் சென்றதில் இருவரும் பலியாகியுள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் மக்களுடைய கைகளில் ஸ்மார்ட்போன் இருப்பதால் வெவ்வேறு இடங்களில் நின்று செல்பி எடுப்பதை ஒரு வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். அவ்வாறு அவர்கள் நின்று எடுக்கும் இடங்கள் ஆபத்தானவை என்பதை யோசிக்காமல் இருபதால் பல நேரங்களில் தங்கள் உயிரையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப் (42) சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாத்திமா பீவி (40) மதரசா பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமர் ஷெரீப்பின் நண்பர் ஜாபர் சாதிக் (45) பனியன் கடை நடத்தி வருகிறார். உமர் ஷெரீப், ஜாபர் சாதிக் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் ஒரு காரில் குமரி மாவட்டத்துக்குச் சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், நேற்று மதியம் நாகர்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரை வந்தனர். அங்கு உமர் ஷெரீப்பும், பாத்திமா பீவியும் கடலில் கால்களை நனைத்தபடி தங்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது வந்த ராட்சத அலை பாத்திமா பீவியை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உமர் ஷெரீப், மனைவியைக் காப்பாற்ற முயன்ற போது அவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இதனால் கரையில் இருந்த அவர்களின் மகள்கள் அலறியடித்துக்கொண்டு பெற்றோரைக் காப்பாற்ற கடலுக்குள் ஓடினர். அப்போது மீண்டும் பெரிய அலை வந்ததால் ஜாபர் சாதிக், நண்பரின் மகள்களைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டு சென்றார். அதற்குள் உமர் ஷெரீப், பாத்திமா பீவி ஆகியோரைக் கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

இதைகண்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலில் இறங்கி, கணவன் மனைவி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. அதில் இருந்த மருத்துவ குழுவினர் இருவரையும் பரிசோதித்துப் பார்த்து விட்டு அவர்கள் இறந்து விட்டதாகக் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்க