June 30, 2016
தண்டோரா குழு
ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை விசாரிக்கச் சென்ற அம்மாநில மகளிர் ஆணைய பெண் உறுப்பினர், பாதிக்கப்பட்ட பெண்ணோடு செல்பி எடுத்துக்கொண்டது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரதட்சணை தராததால் 30 வயது இளம் பெண்ணை, அப்பெண்ணின் கணவனும், அவனது சகோதரனும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது மட்டுமின்றி அப்பெண்ணின் நெற்றியிலும், கையிலும் வரதட்சணை தராதவர் எனப் பச்சை குத்தியும் கொடுமைப்படுத்தினர்.
அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க அம்மாநில மகளிர் ஆணைய தலைவர் சுமன் சர்மா மற்றும் உறுப்பினரான சோம்யா சம்ஜார் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மகளிர் ஆணைய உறுப்பினரான சோம்யா சம்ஜார் செல்பி ஒன்றை எடுத்துள்ளார். இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து இந்த செல்பிக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதனைத் தொடர்ந்து சோம்யா சம்ஜாரிடம் விளக்கம் கேட்டு ராஜஸ்தான் மகளிர் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.