November 18, 2017
பி.எம்.முஹம்மது ஆஷிக்
இந்தியாவின் மூன்றாவது பெரியக்கட்சி, எம்ஜிஆர் மறைவிற்குப்பின் தனி ஒரு பெண்ணாக நின்று அதிமுகவை வளர்த்தி தமிழகத்தின் அதிகார மையமாக திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவரது மரணம் இன்னும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு சசிகலா அதிமுகவை வழி நடத்துவார் என்று சொல்லிவந்த வேளையில்
தற்போது சசி குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சொன்னால் தீராது.
கடந்த 9 ஆம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் நிறுவனமும் தப்பவில்லை. 6 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிலும் முக்கியமாக ஜெயா டிவி சிஇஓ விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணப்பிரியா, சகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று ஜெயலலிதா வாழ்ந்த
போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று 4 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கிட்டத்தட்ட 21 வருடத்திற்குப் பிறகு சோதனை நடப்பது அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.
ஆம்! கடந்த 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெயலலிதா மீது ஊழல் புகார்கள் எழுந்தபோது ஒரு மெகா ரெய்டு நடந்தது. அதற்கு பின் இப்போது தான் மீண்டும் போயஸ் கார்டனில் ரெய்டு நடக்கிறது. 1996ம் ஆண்டு நடந்த அந்த ரெய்டு 5 நாட்கள் நடந்தது. அதில் பல முக்கிய ஆவணங்கள், நகைகள், நூற்றுக்கணக்கான செருப்பு ஜோடிகள் மற்றும் இன்னும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அப்போது நடந்த அந்த ரெய்டு நாடு முழுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அப்போது நடந்தது திமுக ஆட்சி.
இந்நிலையில், ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவரது வீட்டில் இப்போது சசிகுடும்பத்தால் ஒரு மெகா ரெய்டு நடந்துள்ளது. வருமான வரித்துறையின் இந்த அதிரடியால் போயஸ் கார்டன் வீட்டுக்கு முன்பு அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
போயஸ் கார்டனில் சசிகலா அறை, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறை என ரூம் ரூமாக அதிகாரிகள் சோதனையிட்டதாக கூறப்படுகிறது. கடைசியில் ஜெயலலிதாவின் அறையை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றுள்ளனர். ஆனால், சசி தரப்பினர் அதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அம்மா இறந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகாதா நிலையில் தங்களுக்கெல்லாம் கோவிலாக விளங்கும் அம்மா வாழ்ந்த இல்லத்தில் தற்போது தங்கள் கட்சி ஆட்சி நடந்தும் சோதனை நடந்துள்ளது.
இதனால் அம்மாவின் கோவில் கறைபடிந்த விட்டதென அதிமுகவின் உண்மை தொண்டர்கள் புலம்பி வருகிறார்களாம்.