November 16, 2017
சென்னை கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னமாங்கோடு பகுதியில் கால்வாயை கடந்து 7கி.மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
சென்னை கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னமாங்கோடு பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்கு தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது.இந்நிலையில் மேல்நிலை மற்றும் உயர்நிலை படிப்பை தொடரவும், தனியார் பள்ளிகளில் சேரவும் 7கி.மீட்டர் தூரம் உள்ள சுண்ணாம்பு குளம் பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது.
தினமும் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சுண்ணாம்பு குளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கும், தனியார் பள்ளிகளுக்கும் சென்று வருகிறார்கள்.
மேலும்,பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள சில்வர் கால்வாயில் நடந்து செல்ல வேண்டும்.தற்போது பெய்து வந்த தொடர்மழையால் சில்வர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவ்வழியே அனைத்து வாகனபோக்குவரத்தும் தடைபட்டது. இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். அவர்கள் புத்தக பைகளை தலையில் சுமந்தபடி இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்த படியே மறுகரையை அடைகிறார்கள்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
“மழை காலத்தில் சில்வர் கால்வாய் வழியே வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்லும் நிலையில் பழவேற்காடு ஏரிக்கு செல்லும் வழியில் தரைப்பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் தண்ணீரில் இறங்கி கரையை கடக்க வேண்டி உள்ளது.
மழை காலங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை இந்த கால்வாய் வழியே அனுப்ப பயந்து பலர் பள்ளிக்கு அனுப்பாமல் விட்டு விடுகின்றனர். இந்த கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழை காலத்தில் இந்த கால்வாயை மாணவர்கள் படகில் கடந்த போது பெரிய விபத்து ஏற்பட்டது. எனவே கால்வாயை கடக்க தரைப்பாலம் அமைத்து தரவேண்டும்”.
இவ்வாறு அவர்கள் கூறினர்.