November 15, 2017
தண்டோரா குழு
புதுச்சேரி ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரம் கூட தமிழக ஆளுநருக்கு இல்லை என திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். நேற்று கோவை மாவட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று கோவை நகரப்பேருந்து நிலையத்தில் பயோ டாய்லெட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு செய்த அவர் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஈடுபட்டார். தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆளுநரின் ஆய்வு மத்திய, மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது. இதுபோன்ற ஆய்வுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக கைவிட வேண்டும்.
நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பினால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாநில நிர்வாகத்தில் தலையிட புதுச்சேரி ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரம் கூட தமிழக ஆளுநருக்கு இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்.