November 3, 2017
தண்டோரா குழு
வடகிழக்கு பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்று (நவ 3) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலை,வார்டு 173,அடையாறு மண்டலம் மற்றும் கேசவபுரத்தில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் சாலையை சீர்செய்யும் பணியினைப் பார்வையிட்டு, அங்குள்ள அம்மா உணவகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கினர்.
மேலும்,தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் சாலை, பார்க் ஹோட்டல் அருகில் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்பு மூலம் மழைநீர் வடிகால்களில் வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு, சாலையில் உள்ள மழைநீரை விரைந்து வெளியேற்றி தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்திட வேண்டும் எனவும்,சிந்தாதரிப்பேட்டையில் உள்ள பொது நிவாரண சமையல் கூடத்தினை பார்வையிட்டு அங்கு நிவாரண முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயாராகி வரும் உணவினை பரிசோதித்து, பொதுமக்களுக்கு தரமான உணவினை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தெரிவிக்கையில்,
நேற்று தொடர்ந்து கனமழை பெய்ததனால், உடனடியாக மோட்டர் பம்பை பயன்படுத்தி
மழைநீரை வெளியேற்ற இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தற்பொழுது மழைநீர் தேங்கிய இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் கால்வாய்களில் தூர்வாரும் மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்றது. தற்பொழுது கால்வாயில் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றும் பணி தேவைப்படும் இடங்களில் நடைபெறுகிறது.
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை மாநகராட்சியின் சார்பில் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. அதில் 140 நபர்கள் தங்கியிருந்த நிலையில் தற்பொழுது அனைவரும் அவர்களின் இல்லங்களுக்கு திரும்பி விட்டனர். காலையில் 3250 நபர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் 13 சுரங்கப்பாதைகள் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள சுரங்கப்பாதைகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழையை எளிதில் சமாளித்திட பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார்.