October 28, 2017
தண்டோரா குழு
கோவையில் கொடுத்த கடனை வசூலிக்க வேண்டி 7 வயது மகனுடன் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டவரை பத்திரிகையாளர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கந்து வட்டி பிரச்சினையில் நெல்லையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மறையும் முன்பாகவே கோவையில் கொடுத்த கடனை வசூலிக்க வேண்டி 7 வயது மகனுடன் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார்.விசைத்தறி உரிமையாளரான இவர் அதே பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளரான மோகன்குமார் என்பவருக்கு தொழில் நிமித்தமாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.கடன் கொடுத்து மூன்று ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோகன்குமார் தாமதித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கந்துவட்டி கொடுமை என காவல்துறையில் புகார் அளிப்பேன் எனவும் மிரட்டியுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது 7 வயது மகனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
முன்னதாக கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க வந்த அவரை காவலர்கள் குடிகாரர் என புறக்கணித்ததால் தான் மறைத்து வைத்திருந்த மண்ணென்ணையை இருவரது உடலில் ஊற்றியதுடன் மண்ணென்ணையை குடித்தும் தீப்பற்ற வைக்க முற்பட்டார்.
அப்போது அங்கிருந்த கலைஞர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் சொர்ணகுமார் அவரிடமிருந்து தீப்பெட்டியை பிடுங்கி அவரை காப்பாற்றினார்.தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அவ்விருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்து காவல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.