• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு – முதலமைச்சர் பழனிசாமி

October 27, 2017 தண்டோரா குழு

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது. திராவிட மொழிகளுக்குத் தாய்மொழியாக விளங்குவது. இலக்கண, இலக்கியங்களை தன்னகத்தே கொண்ட ஏற்றமிகு மொழி, தமிழ்மொழி. எவரும் ஏந்தி மகிழும் இனியமொழி.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.ஆனால் நம் தமிழ்மொழிக்கு இருக்கும் சிறப்புகள் வேறு மொழிகளுக்கு நிச்சயமாக இருக்காது.தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் ஜெயலலிதா அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒருதனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு, இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதிவழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல், ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ்இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ்மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க