September 30, 2017 தண்டோரா குழு
தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் கோவை மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையங்கள்,மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கழிப்பறைகள் பயன்பாட்டினை ஊக்குவித்தல் மற்றும் சுகாதாரம் பேணிகாப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு தூய்மையே சேவை என்ற பிரச்சார இயக்கம் செப்டம்பர் 15-ம்தேதி அன்று தொடங்கப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி தொண்டாமுத்தூர் ஒன்றியம்வெள்ளிமலைப்பட்டிணம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
அதன் பின்னர் அவர் தெரிவிக்கையில்,
“தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மையே சேவை என்ற இயக்கம் தொடங்கப்பட்டு மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் முழு சுகாதாரபணிகள் மேற்கொள்ளும் இயக்கமாக நடைபெற்று வருகின்றது.மேலும், தூய்மை பாரத இயக்கம் சார்ந்தப்பணிகளை அனைத்து நிலைகளிலும் முடுக்கிவிடுதல்,சுகாதாரத்தினை பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி பொது இடங்களில் துப்புறவு பணிகளை மேற்கொள்ளுதல்,சுகாதாரத்தினை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்தல் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர்கள் மூலம் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த இயக்கத்தின் மூலம் கோவை மாவட்டத்திலுள்ள சுகாதார நிலையங்கள்,மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகங்கள்,தொடர்வண்டி நிலையங்கள்,பேருந்து நிலையங்கள்,அரசு அலுவலகங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்கள் போன்ற அனைத்து பகுதிகளிலும் துப்புறவு பணியாளர்கள் மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.