September 26, 2017
தண்டோரா குழு
சிங்காநல்லூர் பகுதியில் 24 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதைக் கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் அண்மையில் பெய்த கனமழையால் குளம், குட்டைகள் ஆகியவை நிரம்பியும் கூட கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் தொகுதிக்கு 24 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் குற்றம்சாட்டினர்.
மேலும் இதுகுறித்து பலமுறை மாநகராட்சி ஆணையருக்கு மனுகொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார்.இதினிடையே கோவை மாநகராட்சியின் இந்த போக்கை கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 2௦௦க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.