September 12, 2017
தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 537 வீடுகள் இன்று அகற்றப்பட்டன.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திலுள்ள,ஆத்துப்பாலம், அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்கு அணைமேடு மற்றும் உக்கடம் பெரியகுளம் தெற்குகரை பகுதிகளில் நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றப்பட்டது.
இப்பகுதிகளில் சுமார் 75 ஆண்டுகளாக நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 537 வீடுகள் இன்று அகற்றப்பட்டன.இதில் அணைமேடு ஒன்றில் 71 வீடுகள் அணைமேடு இரண்டில்– 276 வீடுகள், துர்கா காலனி 7 வீடுகள்,அண்ணா காலனி 56 வீடுகள், முத்து காலனி 64 வீடுகள், சேரன் நகர் 53 வீடுகள் அகற்றப்பட்டன.
மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வெள்ளலூர் பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஒதுக்க உத்தரவு வழங்கி ஒருமாத கால அவகாசம் கொடுத்தும், காலி செய்யாததால் இன்று அனைத்து வீடுகளும் அகற்றப்பட்டன.
மேற்கண்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் அணைமேடு பகுதியில் இருந்து வெள்ளலூர் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் மூலம் மழை நீர் தடையின்றி சென்று ஏரி நிரம்புவதற்கு வழிவகை ஏற்படும்.
மேலும், அணைமேடு பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவும், முத்துகாலனி சேரன் நகர்,அண்ணா காலனி, உக்கடம் பெரியகுளம் தெற்கு கரை பகுதிகளில் 3 ஏக்கர் பரப்பளவு,ஆகமொத்தம் 7 ஏக்கர் பரப்பிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த நடவடிக்கையின் மூலம் 18 இடங்களில் மொத்தம் 1415 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படவுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் இணைப்பு மற்றும் சுற்றுப்புற அபிவிருத்தி பணியின் முதற்கட்டபணி மாநகராட்சி சார்பாக களத்தில் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.