September 5, 2017 
தண்டோரா குழு
                                எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை செயலாளர் பூபதியை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் உரிமை குழு நோட்டீஸ்தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தனர். 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க. ஸ்டாலின் தெரிவித்ததாவது,
“உரிமை மீறல் நோட்டீக்கு பதில் அளிக்க 15நாள் அவகாசம் கேட்டுள்ளோம். சட்ட நிபுணர்களை ஆலோசித்து தான் இதுக்குறித்து பதிலளிக்க முடியும்.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு உரிமை இல்லை. இன்றைக்கு நடந்த அவரது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 109 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். 
இதனால் தமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கே வழிவகுக்கும். இனியும் ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது.”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.