November 26, 2026
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி CREDAI கோயம்புத்தூர் மற்றும் துருதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து, மாநகராட்சி அலுவலர்களின் மனநலத்தை மேம்பம்படுத்தும் ” மனவளம் ” என்ற ஓராண்டு நிகழ்ச்சியின் துவக்க விழா 25.11.2026 அன்று கோவை மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் மகிழ்ச்சியான வாழ்விற்காக மன வலிமையை வளர்த்துக்கொள்ளுதல் ஆகும். இந்நிகழ்ச்சியை காணொளி மூலம் துவக்கி வைத்துபேசிய,கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா,IAS, இன்று நம் மக்களில் பலருக்கு மன ஆரோக்கியத்தைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை மனநலத்துடன் உடல் நலத்தையும் சமமாகப் பேணுவது மிகவும் அவசியம் என்பதால் மாநகராட்சி அலுவலர்களுக்கு என்று இந்த மனவளத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அளிக்க முன்வந்துள்ள கிரெடாய் கோவை அமைப்பிற்கும் துருதி அறக்கட்டளைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார்.
இதைத் தொடர்ந்து பயிலரங்கத்தின் நன்மைகளைப் பற்றி மாநகராட்சி அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
CREDAI கோயம்புத்தூர் தலைவர் அரவிந்த் குமார் எஸ்.ஆர்.பேசிய போது,நம் அனைவருக்கும் மனவளம் இருந்தால் தான் மற்ற அனைத்து வளங்களும் வரும். ஆதலால் இந்த மனவளத் திட்டத்தை கிரெடாய் , துருதி அறக்கட்டளையுடன் இணைந்து கோவை மாநகராட்சி அலுவலர்களுக்காக ஒரு வருட காலம் தொடர்ந்து அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இதில் மனநல நிபுணர்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு நேரடியாகவும், ஹெல்ப்லைன் மூலமாகவும் ஆலோசனை வழங்குவார்கள். இத்திட்டத்தால் சுமார் 1500 மாநகராட்சி அலுவலர்கள் பயனடைவார்கள் என்றார் .
இதைத் தொடர்ந்து கிரெடாய் கோவை அமைப்பு துருதி அறக்கட்டளையுடன் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது.
கிரோய் தமிழ்நாடு அமைப்பின் வரும் ஆண்டுத் தலைவர் ( Incoming President ) குகன் இளங்கோ, கிரெடாய் அமைப்பானது கடந்த 20 வருடங்களாக கோவை மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்றும் கிரெடாய் அமைப்பு, கோவையில் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், மற்றும் நகரைப் பசுமைப் படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது ” என்றார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையர் T. குமரேசன் அவர்கள் பேசியபோது,
“இந்த மனவள பயிற்சி முகாமை மாநகராட்சி அலுவலர்களுக்கு அளிப்பது மிகவும் அவசியம்.இன்று ஒவ்வொருவருக்கும் வேலை பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும் அதிகமாகிறது. ஆகையால் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார்.கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.சரஸ்வதி பேசிய போது, ” நாம் பல சமயம் அலுவலக வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு குடும்ப மகிழ்ச்சியை இழக்கிறோம் . நமக்கு பல பிரச்சனைகள் இருந்தாலும் நம் மனதை சரியாக வைத்துக் கொண்டால் அவைகளுக்கு சரியான தீர்வு காணலாம் ” என்றார்.
துருதி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுரேஷ் அருணாசலம், சென்னையில் மாநகராட்சி அலுவலர்களுக்கு மனநலத் திட்டங்களை அளித்ததில் நல்ல பலன் இருந்தது. அதை தற்பொழுது கோவை மாநகராட்சியிலும் அளிக்க உள்ளோம் ” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கிரெடாய் கோவை உப தலைவர் ராஜீவ் ராமசாமி, செயலர் சஞ்சனா வியஜகுமார் மற்றும் நிர்வாக உறுப்பினர் யு.சோமசுந்தரம் ஆகியோர் பங்கு கொண்டனர்.