November 3, 2026
தண்டோரா குழு
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும்போது கண் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் பிரிவுத் தலைவர் டாக்டர் பிரவீன் தனபால் கூறுகையில்,
பட்டாசுகளால் ஏற்படும் கண் காயங்கள் வெளிப்புறத்தில் சிறியதாகத் தெரிந்தாலும், கண்ணின் உள் பகுதிகளைப் பாதித்து நிரந்தர பார்வை இழப்பைக்கூட ஏற்படுத்தலாம்.எனவே, கண் காயங்களுக்கு சிகிச்சை பெறுவதில் தாமதம் செய்யக்கூடாது என்றார்.
பட்டாசுகளிலிருந்து வெளியாகும் தீப்பொறிகள்,சாம்பல் மற்றும் வெடிப்புத் துகள்களால் கருவிழியில் சிராய்ப்பு, கண் இமைகளில் தீக்காயம், கண்ணுக்குள் ரத்தக்கசிவு, விழித்திரைப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, அருகில் நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் கண் காயங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கண் பாதுகாப்புக்கான வழிமுறைகள்:
பட்டாசுகளை திறந்தவெளியில் மட்டுமே வெடிக்க வேண்டும். பட்டாசுகளைப் பற்ற வைக்கும்போது முகத்திற்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. வேடிக்கை பார்ப்பவர்கள் குறைந்தது 5 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கக் கூடாது. பட்டாசுகளைக் கையாண்ட பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
கண்ணில் காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது:
கண்ணில் தூசி அல்லது சாம்பல் பட்டால் கண்களைத் தேய்க்கக்கூடாது. சாதாரண எரிச்சல் ஏற்பட்டால் சுத்தமான தண்ணீரில் 20 நிமிடங்கள் கண்களைக் கழுவலாம். ஆனால், பட்டாசுத் துகள் கண்ணுக்குள் ஆழமாகச் சென்றிருந்தால் கண்களைக் கழுவவோ அழுத்தம் கொடுக்கவோ கூடாது. திடமான பாதுகாப்புக் கவசத்தால் கண்ணைப் பாதுகாத்து உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி கண் சொட்டு மருந்துகள் அல்லது வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தக்கூடாது.
கண் சிவத்தல், வலி, பார்வை மங்குதல், தொடர்ந்து கண்ணீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். சிறிய காயமாகத் தோன்றினாலும் அலட்சியம் செய்யக்கூடாது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையின்போது எதிர்பாராத கண் காயங்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தயாராக இருப்பதாகவும், அவசர உதவிக்கு 95949 24048 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தீபாவளியைக் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மருத்துவமனை கேட்டுக்கொண்டுள்ளது.