October 31, 2026
தண்டோரா குழு
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (CIT), செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பொறியியல் கல்வியுடன் ஒருங்கிணைத்து,எதிர்காலத் தொழில்நுட்பத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில், ‘CRANE’ (Centre for Research and AI-Native Engineering) என்ற ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை கல்லூரியின் முன்னாள் மாணவியும், டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை மாற்ற அதிகாரியுமான சுகன்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், CIT கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர், தலைவர் மற்றும் தாளாளர் சந்தோஷ் கலந்து கொண்டார்.
மேலும், CIT முன்னாள் மாணவர்களும், கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு உறுப்பினர்களுமான காலென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், ரெவச்சர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான அஷ்வின் பாரத், வைனர் நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைமை அதிகாரியும், பியர் ஐலண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராஜேஷ் ராஜகோபாலன், நியோ கிளவுட் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் AI/ML உள்கட்டமைப்புப் பிரிவின் முதன்மைத் தீர்வுக் கட்டமைப்பாளரான அய்யப்பன் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
CIT கல்வி நிறுவனங்களின் தலைமை கல்வி அதிகாரி அலமேலு மற்றும் CIT கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொடக்க விழாவில் பேசிய சுகன்யா,
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறைகளில் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள், பொறியியல் செயல்முறைகளில் உருவாகி வரும் புதிய அணுகுமுறைகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
கல்வி மற்றும் தொழில்துறையின் வளர்ந்து வரும் தேவைகளை இணைக்கும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் CRANE மையத்தை CIT நிறுவியிருப்பதைப் பாராட்டினார். மேலும், பல்வேறு துறைகளில் AI அடிப்படையிலான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதில் இம்மையம் முக்கியப் பங்காற்றும் என்றும் தெரிவித்தார்.
CIT-யின் செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, CIT முன்னாள் மாணவர்கள் நான்கு பேர் அடங்கிய செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியராகவும், மிச்சிகன் இன்ஸ்டிடியூட் ஃபார் கம்ப்யூட்டேஷனல் டிஸ்கவரி அண்ட் இன்ஜினியரிங் (MICDE) இயக்குநராகவும், ஜெமினஸ்.AI நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரியாகவும் உள்ள கார்த்திக் துரைசாமி இக்குழுவின் தலைவராகச் செயல்படுவார்.
அஷ்வின் பாரத், ராஜேஷ் ராஜகோபாலன் மற்றும் அய்யப்பன் புருஷோத்தமன் ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள்.
இக்குழு, மையத்தின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவதுடன், தொழில்துறை நிறுவனங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிச் சூழலை உருவாக்கவும் உதவும்.
750 மாணவர்களுக்கு AI சிறப்புப் பயிற்சி
இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, சுமார் 750 CIT மாணவர்கள் பயன்பெறும் வகையில், தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில், ‘Foundations of Responsible AI Engineering’ மற்றும் ‘Reliable AI Systems: Design, Test, and Deploy’ ஆகிய இரண்டு சிறப்புப் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாடங்கள் மூலம், வளர்ந்து வரும் AI தொழில்நுட்பங்கள் குறித்த நடைமுறை அறிவு, நிஜ வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகள், தொழில்நுட்பத் தளங்களில் நேரடிப் பயிற்சி ஆகியவை மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மேலும், பொறுப்பான AI பயன்பாடு, நம்பகமான செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் செயல்முறை சார்ந்த கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
CIT-CRANE செயற்கை நுண்ணறிவு ஆய்வகம்
இதன் ஒரு பகுதியாக, புதிதாக CRANE செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும், புதிய மாதிரிகளை உருவாக்குவதற்கும், ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கும் தேவையான வசதிகளை வழங்கும்.
நடைமுறைப் பயிற்சி, குழு ஆராய்ச்சித் திட்டங்கள், தொழில்துறை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளுக்கு இந்த ஆய்வகம் உதவும்.
மேலும், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்கள், தொழில்துறை நிறுவனங்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான கூட்டுப் பணிகளுக்கும் இந்த ஆய்வகம் வாய்ப்பளிக்கும்.
அனைத்துப் பொறியியல் துறைகளிலும் AI தொழில்நுட்பம்
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுடன் மட்டும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நின்றுவிடாமல், அனைத்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளிலும் அதனைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே CRANE மையத்தின் முக்கிய நோக்கமாகும்.
இயந்திரவியல், சிவில், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், வேதிப் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, புதிய தீர்வுகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் உற்பத்தித் தொழில், மருத்துவம், உள்கட்டமைப்பு, எரிசக்தி, தானியங்கி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் சவால்களுக்கு நவீன தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க முடியும்.
மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களை ஒருங்கிணைத்து, கூட்டுத் திட்டங்கள், தொழில்நுட்ப வழிகாட்டுதல், அறிவுப் பகிர்வு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும் இம்மையம் திட்டமிட்டுள்ளது.
நடைமுறைச் சவால்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் புதிய திட்டங்களை உருவாக்குவதன் மூலம் புதுமைச் சிந்தனை, தொழில்முனைவுத் திறன், விமர்சனச் சிந்தனை மற்றும் தொழில்துறைக்குத் தேவையான தீர்வுகளை உருவாக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதே இம்மையத்தின் முக்கிய இலக்காகும்.