October 16, 2026
தண்டோரா குழு
முன்னணி உலகளாவிய தயாரிப்பு பொறியியல் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட், செப்டம்பர் 30, 2026 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான தனது நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருமானம் ரூ.16,988 மில்லியனாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 28.4 சதவீதம் அதிகமாகும். சேவை பிரிவின் வருமானம் கடந்த ஆண்டை விட 33.9 சதவீதம் அதிகரித்து ரூ.13,557 மில்லியனாக உள்ளது. இதேபோல் சேவை பிரிவின் வருமானமானது 141.9 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இது முந்தைய காலாண்டை விட 4.3 சதவீதம் உயர்வு ஆகும். செயல்பாட்டு லாபம் கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகரித்து ரூ.2,733 மில்லியனாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.1,655 மில்லியனாக இருந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,714 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பணியாளர்களைப் பொறுத்தவரை நிறுவனத்தில் மொத்தம் 12,895 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஊழியர் விலகல் விகிதம் 15.6 சதவீதமாக உள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாரன் ஹாரிஸ் கூறுகையில்:
“இரண்டாம் காலாண்டில் வருமானம் 28 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது எங்கள் சிறப்பான செயல்பாட்டைக் காட்டுகிறது. இது இந்த ஆண்டு முழுமைக்குமான எங்கள் வளர்ச்சியின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் புதிய திட்டங்கள் மூலம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பெறுவோம். எங்களின் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகள் மூலம், டாடா டெக்னாலஜிஸ் நிலையான நீண்டகால வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது.” என்று தெரிவித்தார்.
தலைமை நிதி அதிகாரி உத்தம் குஜராத்தி கூறுகையில்:
“எங்கள் வருவாய் 28 சதவீதம் மற்றும் ஈபிஐடிடிஏ லாபம் 32 சதவீதம் அதிகரித்துள்ளது, என்பது எங்களின் வலிமையான செயல்பாட்டைக் காட்டுகிறது. சில பகுதிகளில் சவால்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் எங்கள் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. வலுவான ஆர்டர்கள், நிதி நிலைத்தன்மை மற்றும் ஊழியர்கள் மீதான தொடர் முதலீடுகள் மூலம், எதிர்கால வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் முழுமையாகத் தயாராக உள்ளோம்.” என்று தெரிவித்தார்.