August 17, 2026
தண்டோரா குழு
கோவையில் செயல்பட்டு வரும் டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா கோவை மணி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 2021–22 முதல் 2025–26 வரையிலான கல்வியாண்டுகளில் பயின்ற 110 மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அகாடமியின் கல்விப் பயணத்தில் இந்த விழா முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
பட்டமளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜி. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்தியாவின் முன்னணி மேடை வடிவமைப்பாளரும், கலாச்சாரச் சிந்தனையாளரும், பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராஜீவ் சேதியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு எல்.எம்.டபிள்யு.லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு மற்றும் ஜி.கே.டி.அறக்கட்டளையின் அறங்காவலர் டாக்டர் லலிதாதேவி சஞ்சய் ஜெயவர்த்தனவேலு ஆகியோர் தலைமை வகித்தனர்.
2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரி, தென்னிந்தியாவில் தனித்துவமான வடிவமைப்புக் கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. படைப்பாற்றல், துறைசார் அடிப்படை அறிவு, சூழல்சார் புரிதல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ற கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களை உருவாக்கி வருகிறது.
தற்போது தகவல் தொடர்பு வடிவமைப்பு, தொழில்துறை வடிவமைப்பு, பயனர் அனுபவ வடிவமைப்பு, அனிமேஷன் மற்றும் திரைப்படத் தயாரிப்பு, உள்துறை வடிவமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் இளநிலை வடிவமைப்புப் படிப்புகளையும், தகவல் தொடர்பு வடிவமைப்பு மற்றும் தொழில்துறை வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் முதுநிலை வடிவமைப்புப் படிப்புகளையும் அகாடமி வழங்கி வருகிறது.
இந்த முதல் பட்டமளிப்பு விழா, மாணவர்களின் கல்விச் சாதனையை கொண்டாடுவதுடன், அவர்கள் கல்விச் சூழலில் இருந்து தொழில்முறை உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் முக்கியமான தருணமாகவும் அமைந்தது. பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியுடன் ஆர்வம், விமர்சனச் சிந்தனை, பரிசோதனை மனப்பான்மை, படைப்பாற்றல் மற்றும் சமூகச் சூழலைப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் தங்களுடன் எடுத்துச் செல்கின்றனர்.
பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதியாக டி.ஜே. அகாடமி மாணவர்களின் படைப்புகளைக் கொண்ட சிறப்பு மாணவர் படைப்புக் கண்காட்சியும் நடைபெற்றது. தகவல் தொடர்பு வடிவமைப்பு, அனிமேஷன், திரைப்படத் தயாரிப்பு, புதிய ஊடகம், ஊடாடும் வடிவமைப்பு மற்றும் தொழில்துறை வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளில் முதல் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை மாணவர்கள் மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.
மாணவர்களின் படைப்பாற்றல், சிந்தனை மற்றும் வடிவமைப்பு அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தக் கண்காட்சி, மாணவர்கள் தங்களது படைப்புகளை தொழில்துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள், குடும்பத்தினர் மற்றும் பார்வையாளர்களிடம் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியது.
பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள்,அவர்களது குடும்பத்தினர், பேராசிரியர்கள்,தொழில்துறை வல்லுநர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அறங்காவலர்கள் மற்றும் வடிவமைப்பு மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.