July 10, 2026
தண்டோரா குழு
”வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாம்” என்ற விழிப்புணர்வு கருத்தை மையமாகக் கொண்டு, உயிர் அமைப்பு மற்றும் கல்லூரி உயிர் கிளப் தன்னார்வலர்கள் இணைந்து கோயம்புத்தூர் காந்திபுரம் சிக்னலில் மெகா சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து காவல்துறையின் மேற்பார்வையில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிக்னலில் நின்றிருந்த வாகன ஓட்டிகளிடம் தன்னார்வலர்கள் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்து அபாயங்கள் குறித்து விளக்கப்பட்டதுடன், பாதுகாப்பான வாகன ஓட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும்,போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றிய வாகன ஓட்டிகள் பாராட்டப்பட்டு, தொடர்ந்து பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்குமாறு ஊக்குவிக்கப்பட்டனர்.
உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் ரோட்டேரியன் டி.பாலசுந்தரம் கூறுகையில்,
“சாலை விபத்துகளை குறைப்பதில் ஒவ்வொரு வாகன ஓட்டிக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது. குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் பல உயிர்களை பாதுகாக்க முடியும். பாதுகாப்பான சாலைப் பண்பாட்டை உருவாக்க இதுபோன்ற தொடர்ச்சியான விழிப்புணர்வு இயக்கங்கள் அவசியம்,” என்றார்.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் விஎல்பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 60 உயிர் கிளப் தன்னார்வலர்கள் பங்கேற்று, சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மற்றும் சாலைப் பயனாளர்களை நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
டி.பாலசுந்தரம்,அறங்காவலர், உயிர் அமைப்பு, கோயம்புத்தூர்,எம். ரவிச்சந்திரன்,கூடுதல் துணை காவல் ஆணையர் (போக்குவரத்து திட்டமிடல்), கோயம்புத்தூர் மாநகரம்,கே. செந்தில்குமார்,காவல் ஆய்வாளர் (போக்குவரத்து),வி.பிரபாகரன்உதவி காவல் ஆய்வாளர் (போக்குவரத்து),எஸ். சுப்புலட்சுமி,உதவி கோட்டப் பொறியாளர் (சாலைப் பாதுகாப்பு), நெடுஞ்சாலைத்துறை, கோயம்புத்தூர் மற்றும் கனகசுப்பிரமணி,கருத்தாளர், உயிர் அமைப்பின் வளநபரான ஆகியோர் இந்நிகழ்விற்கு வழிகாட்டிகளாகப் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் முழு ஒத்துழைப்பை வழங்கினர்.உயிர் அமைப்பின் கல்விப் பிரிவு வழிகாட்டுநர் கேப்டன் ஆர்.சதீஷ் தலைமையில்,உயிர் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சாலை பாதுகாப்பு குறித்த சமூக விழிப்புணர்வை வலுப்படுத்தும் நோக்கில் உயிர் அமைப்பு தொடர்ந்து பல்வேறு பொதுமக்கள் பங்கேற்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது.