July 1, 2026
தண்டோரா குழு
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) தனது 78வது பட்டயக் கணக்காளர் தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தென்னிந்திய மண்டலக் குழுவின் கீழ் செயல்படும் ICAI கோயம்புத்தூர் கிளையில் இன்று பல்வேறு சமூகப் பணிகள் மற்றும் விழாக்கால நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் துடியலூரில் அமைந்துள்ள ICAI பவனில் ICAI கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னிந்திய ஆடிட்டர்கள் சங்கத்தின் தலைவர் CA. எஸ். வெங்கடேஷ், ICAI கோயம்புத்தூர் கிளைத் தலைவர் CA. சுர்வஜித் எஸ். கிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பட்டயக் கணக்காளர் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சமூக நலனை கருத்தில் கொண்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாக 750-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.இன்று மாலை நடைபெறவுள்ள 78வது பட்டயக் கணக்காளர் தின விழாவில், தொழிலில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த மூத்த பட்டயக் கணக்காளர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதில் தொழில் துறையின் முன்னோடிகள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்பு அளப்பரியது. நிதி மேலாண்மை, வரிவிதிப்பு, தணிக்கை, நிறுவன ஆளுமை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
1949 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ICAI, உலகின் மிகப் பெரிய மற்றும் மதிப்புமிக்க தொழில்முறை கணக்கியல் அமைப்புகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த 78 ஆண்டுகளாக தொழில்முறை திறன், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நலன் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது.
கோயம்புத்தூர் கிளை தற்போது 2,300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கும், 9,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவை செய்து வருகிறது. தொழில்முறை மேம்பாட்டு நிகழ்ச்சிகள், மாணவர் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூக நலப் பணிகள் மூலம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“78 ஆண்டுகள் நம்பிக்கை, நேர்மை மற்றும் தேச கட்டமைப்பு” என்ற உயரிய நோக்கத்துடன் ICAI தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.