June 26, 2026
தண்டோரா குழு
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, United College of Pharmacy மற்றும் தமிழ்நாடு அரசின் இணைந்து, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (DSP) பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.
“உலக போதைப்பொருள் பிரச்சனை: நீடிக்கும் சிக்கல்கள், புதிய சவால்கள், ஆக்கபூர்வமான யோசனைகள்” என்ற 2026-ஆம் ஆண்டின் கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இப்பேரணியில், நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.
மாண்புமிகு மக்கள் முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில், இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பது குடும்பம், கல்வி நிறுவனங்கள், அரசு, காவல்துறை மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என டாக்டர் கனிமொழி சந்தோஷ் MLA வலியுறுத்தினார்.
அத்துடன்,பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி பேசுகையில்,
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுப்பதில் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆய்வுகளின்படி, இந்தியாவில் 6 மாணவர்களில் ஒருவர் போதைப்பொருள் உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளார். மேலும், இந்தியாவில் தினமும் சுமார் 40 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது கவலைக்கிடமான உண்மையாகும். எனவே, மாணவர்களிடையே மனநல பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.
“போதை இல்லா இளைஞர்கள் – பாதுகாப்பான தமிழகம்” என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.