May 30, 2026
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தின் கிராமப்புற மற்றும் பழங்குடியினர் சமூகங்களுக்கு தரமான சிறுநீரக சிகிச்சை சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்யும் நோக்கில், டிஎம்பி (TMB) அறக்கட்டளை காருண்யா மருத்துவமனையுடன் இணைந்து முக்கிய மருத்துவ உதவித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
காருண்யா நகர் மற்றும் சிறுவாணி மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மேம்பட்ட மருத்துவ சேவைகள் கிடைப்பதில் நீண்டகால சவால்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் கோவைக்கு சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், உடல், மன மற்றும் பொருளாதார சுமைகளை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த சவாலுக்கு தீர்வு காணும் வகையில், டிஎம்பி அறக்கட்டளை சார்பில் இரண்டு உயர் தொழில்நுட்ப டயாலிசிஸ் இயந்திரங்களும், முழுமையாக வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸும் காருண்யா மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.இதன் மூலம் நோயாளிகளின் பயணச் சிரமம் குறைந்து, தகுந்த நேரத்தில் சிகிச்சை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் டிஎம்பி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எம்.முத்தையா மற்றும் டிஎம்பி கோவை பிராந்திய மேலாளர் டி. எர்னெஸ்ட் வசீகரன் ஆகியோர் கலந்து கொண்டு,மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸை காருண்யா பல்கலைக்கழகத்தின் நிதி அதிகாரி ஜோசப் அமல்ராஜ் மற்றும் காருண்யா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் சாம் ஆகியோரிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் முத்தையா,
“தூரம் அல்லது வசதியின்மை காரணமாக எந்த நோயாளியும் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சையை இழக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். காருண்யா மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் மிகவும் தேவைப்படும் சமூகங்களுக்கு தரமான சுகாதார சேவைகளை கொண்டு செல்ல முடிகிறது” என்று தெரிவித்தார்.
கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் இந்த முயற்சி, தமிழ்நாடு முழுவதும் டிஎம்பி அறக்கட்டளை மேற்கொண்டு வரும் சமூகப் பொறுப்புணர்வு பணிகளில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.