May 28, 2026
தண்டோரா குழு
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் “மூட்டுவலி விழிப்புணர்வு மாதம்” ஆக அனுசரிக்கப்படும் நிலையில், தற்போது இளம் வயதினரிடமும் மூட்டுத் தேய்மான பாதிப்பு அதிகரித்து வருவதாக கே.எம்.சி.எச் மருத்துவமனையின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தென்னவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“முன்பு மூட்டுத் தேய்மானம் என்பது வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் நோயாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு குறைவு காரணமாக இளம் வயதினருக்கும் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது,” என்றார்.
மூட்டுத் தேய்மானம் காரணமாக நடப்பதில் சிரமம், முழங்கால் வலி, மூட்டு இறுக்கம், காலை மடக்கி நீட்ட முடியாமை, வீக்கம் மற்றும் கால் வளைந்து போதல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.மேலும், மரபணு காரணங்கள், விபத்துகள், சிகிச்சை பெறாத காயங்கள், ருமட்டாய்ட் ஆர்த்ரைட்டிஸ் போன்ற காரணங்களாலும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் உடற்பயிற்சி, பிசியோதெரபி, உணவுமுறை மாற்றம் போன்ற எளிய சிகிச்சைகள் மூலம் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.ஆனால் பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு வருவதால், அப்போது மருந்துகள் மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் பலன் தராமல் போகும் சூழல் உருவாகிறது. இதனால் சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக அமைகிறது என்றார்.
கோவையில் பகுதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கே.எம்.சி.எச் மருத்துவமனை என்றும், இந்த சிகிச்சையின் மூலம் குறைந்த காயத்துடன் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவி மூலம் 1750-க்கும் மேற்பட்ட துல்லியமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் இந்த ரோபோட்டிக் முறையில் குறைந்த வலி, குறைந்த வீக்கம் மற்றும் விரைவான குணமடைதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாகவும் அவர் விளக்கினார்.
“மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தற்போது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிதான சிகிச்சையாக மாறியுள்ளது. சிகிச்சைக்கு வந்த மூன்றாவது நாளிலேயே நோயாளிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடிகிறது,” என்றும் மருத்துவர் தென்னவன் தெரிவித்தார்.
மூட்டுத் தேய்மானத்தைத் தவிர்க்க உடல் எடையை கட்டுப்படுத்துதல், தினசரி நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், சத்தான உணவுகள் உட்கொள்ளுதல், வைட்டமின் டி சத்து பெற வெயிலில் நடப்பது போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தகவல்கள் மற்றும் முன்பதிவிற்கு: 75488 55512.