January 16, 2026
தண்டோரா குழு
கோவை சிட்ரா பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவமனையின் அதிநவீன வசதிகளை பார்வையிட்ட குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிறுவனர் நல்லா. ஜி.பழனிச்சாமி,செயல் தலைவர் அருண் பழனிச்சாமி, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கேஎம்சிஎச் மருத்துவமனை நிறுவனர் நல்லா பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு இணங்க இந்த தைத்திருநாளில் மருத்துவ உலகில் புதிய எழுச்சியாக இம்மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசியவர், மனிதன் வெற்றி பெற கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம் எனக் கூறியவர், தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அந்த வகையில் வெற்றி பெற்றவர் எனவும், மற்றொருவராக நல்லா பழனிச்சாமி திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
நல்லா பழனிச்சாமி சாதாரண கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் மருத்துவ படிப்பு முடித்த பின்பு, 200 படுக்கை வசதியோடு துவங்கிய மருத்துவமனை இன்றைக்கு 2000 க்கும் மேற்பட்ட படுக்கைகளை கொண்டு சிறப்பாக இயங்கி வருவதாகவும், அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ உலகில் அறிமுகம் செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்கள் உடனடியாக கோவைக்கு இந்த மருத்துவமனை மூலம் கொண்டுவரப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மனிதனின் மூளையில் கொழுப்பு படிவதை பரிசோதனை செய்து அதற்கு சிகிச்சை வழங்குவதற்காக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெட் ஸ்கேன் பரிசோதனை கருவி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது பெருமை அளிப்பதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தினரின் முயற்சி தொடர்ந்து பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கோவைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்தும் என்கிற அடிப்படையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஒரே வருடத்தில் 11 மருத்துவமனைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சிபி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
உலகில் 40 சதவீத மக்கள் நரம்பியல் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பதாகவும், எனவே நரம்பியல் சிகிச்சையில் உலக தர பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் அவசியமாவதை மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாக தெரிவித்தார்.
மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை வழங்கிட இது போன்று அரசு மருத்துவமனையும் தனியார் மருத்துவமனையும் சிறப்பாக இயங்க வேண்டும் எனவும், ஏழை மக்களின் நலனில் அக்கறை கொண்ட பிரதமர் மோடி அவர்கள் சுகாதாரத் துறையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் வரும் 37 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில், 2025 26 ஆம் ஆண்டில் அது 98 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 50 கோடி மக்கள் இலவசமாக மருத்துவ பாதுகாப்பு பெற்று வருவதாகவும், நாட்டின் அனைத்து கிராம பகுதிகளிலும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப நிலை சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டு இங்கு மனநலம் நீரிழிவு நோய் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆரம்ப நிலையில் சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மருத்துவர்களின் தேவையை பூர்த்தி செய்ய அரசு தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும், 2014 ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு முதுகலை மருத்துவம் படிப்பது எட்டாக்கனியாக இருந்த போது, 36 ஆயிரம் சீட்டுகள் மட்டுமே இருந்ததாகவும், இப்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கட்டாயம் உருவாக்க உருவாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் மோடி செயல்பட்டு வருவதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
ஒரு தொழிலாளி நோய்வாய் படுவது என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக தொடர்புடையதாகவும் இளைஞர்களின் ஆரோக்கியம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் எனவும் குறிப்பிட்டவர், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்காமல் வல்லரசான இந்தியாவை உருவாக்க முடியாது, அந்த வகையில் ஆரோக்கியமான வாழ்க்கையை மக்கள் பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் செயல் தலைவர் அருண் பழனிச்சாமி நன்றி உரை தெரிவித்தார்.